கோவை, டிசம்பர் 19
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சனிபகவானுக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு பிடித்தமான உலோகமான இரும்பில், ஆயிரத்து 500 கிலோ எடையில் 7.5 அடி உயரத்தில், சனிபகவானின் வாகனமான காக்கை 400 கிலோ எடையில் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை முதல் சனிபகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களது கரங்களால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தனர்.
பீளமேடு, பேரூர் உள்ளிட்ட சனீஸ்வரன் கோவில்களில் பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 20 வகையான அபிஷேகங்களை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். இதைத்தவிர, பிள்ளையார், சிவன், அனுமன் உள்ளிட்ட திருக்கோவில்களிலும் பொதுமக்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.