கோவை, நவம்பர் 6: தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் மகசூல் அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை பேராசியர் முனைவர் மா.இரா. ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சி மற்றும் குறைவான பயிர் மகசூல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

இதுக்குறித்து முனைவர். ஸ்ரீநிவாசன் கூறுகையில், “தேனீ வளர்ப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயற்கை வழி விவசாயம் தான். தேனீ வளர்ப்பு என்பது இயற்கை விவசாயத்தின் ஓர் அங்கம்.

தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால் பயிர் மகசூல் அதிகரிக்கும். பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் விவசாய நிலங்களில் ஏக்கருக்கு 5 பெட்டி என வைத்துவிட்டால் போதும். ஒரு பெட்டியில் மூன்றாயிரம் தேனீக்கள் வரை வளரும்.தேனீக்கள் மகரந்த சேர்க்கையை பயிர்களிடையே உற்பத்தி செய்துவிடும் இதனால் பயிர்கள் அதிக மகசூல் தரும் .,” என்றார்.
மேலும் ஆப்பீள், பீச், பேரிக்காய், எலுமிச்சை, மா போன்ற பழ வகைகளிலும் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கொத்தமல்லி போன்ற காய்கறி வகைகளிலும் தேனீக்களால் அதிக மகசூல் பெறமுடியும் என்றார் அவர்.
சமீப காலமாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த இளைஞர்கள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனீ வளர்ப்பில் எளிதாக ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சம் வரை சாம்பாதிக்கலாம் என்பதே இதற்கு காரணம்.

தேனீ வளர்ப்பில் ஈடுபட கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பூச்சியியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பிரதி வாரம் 6-ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக நுழைவு கட்டணமாக ரூபாய் 25௦ ஒரு நபருக்கு வசூலிக்கப்படுகிறது.
இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், பயிற்சி வகுப்புகளில் தேனீ வளர்ப்பு குறித்து பாடம் மற்றும் செயல்முறை பாடம் நடத்தப்படும். பயிற்சி வகுப்பு வருபவர்களின் ஆர்வம் தூண்டப்படும் என்றார்.

இந்திய தேனீக்களை வளர்க்க ஒரு பெட்டிக்கு சுமார் 2 ஆயிரம் செலவாகும், இந்த தேனீக்கள் மூலம் வருடத்திற்கு 1௦ கிலோ வரை தேன் எடுக்கமுடியும். அதுவே இத்தாலி தேனீக்கள் வளர்த்தால் வருடத்திற்கு 2௦ கிலோ தேன் எடுக்கமுடியும் இந்த வகை தேனீக்கள் வளர்க்க ஒரு பெட்டிக்கு ரூபாய் 5 ஆயிரம் செலவாகம்.
“ஒரு நபரால் எளிதில் 1௦ பெட்டிகள் வரை தேனீக்கள் வளர்க்க முடியும். ஒரு முறை 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1௦௦ பெட்டி தேனீக்கள் வளர்த்தால் வருடா வருடம் அதன் மூலம் நான்கு லட்சம் வரை லாபம் சம்பாதிக்க முடியும். தேன் மட்டுமல்லாது தேன் மெழுகு, ராயல் ஜெல்லி போன்றவையும் நாம் விற்க முடியும் இதிலும் அதிக லாபம் கிடைக்கும் எனவே தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது” என முனைவர். ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.