கோவை, நவம்பர் 6: வெளிநாட்டில் இருந்து உடலில் மறைத்து தங்கத்தை எடுத்து வந்த பயணியை கோவை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் கோவை வழியாக இந்தியாவிற்குக் கடத்தப்படுவது நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, அப்துல் கரீம்(38) என்ற பயணி, தனது இருகால்களிலும் காயமடைந்ததற்கு மருத்துவக் கட்டு போட்டிருந்தார். அவரது நடையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கரீமை பிடித்து தீவிர சோதனையிட்டனர். அவரது மருத்துவக் கட்டை பிரித்துப் பார்த்த போது, 6 தங்கக்கட்டிகளைப் பொடியாக்கி, கெமிக்கல் பவுடராக மாற்றி அதில் வைத்திருந்தார். இதனைக் கண்டு பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 700 .கிராம். தங்கத் துகள்களை கடத்தி வந்ததை கரீம் ஒப்புக் கொண்டார். அந்த தங்க பௌடெரின் மதிப்பு 26 லட்ச ரூபாயாகும்.

அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில், கோவை விமான நிலையத்தில் மட்டும் ரூ.3.69 கோடி மதிப்புடைய 12.145 கி.கி எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 9.5 கி.கி எடை அளவு தங்கம், இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.