அக்டோபர் 30: உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற இளைஞர் பத்ரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரன். இவருக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகையின் கீழ் கடை வைக்க 30 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, கடை அமைக்க உக்கடம் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று கேட்டு தொடந்து பல முறை அவர் மனு அளித்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று பத்ரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடம் தடையின்மை சான்று வழங்க பணம் கேட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை அமைக்க அனுமதி பெற்றுத்தருவதுடன், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.