கோவை, அக்டோபர் 28: வரும் ஜனவரி மாதம் முதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எப், ஏ.டி.பி உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் போது, வரும் ஜனவரி முதல் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம் கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான கட்டண பட்டியலையும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டனர்.

இந்த புதிய கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் ஜனவரி முதல் இந்த புதிய கட்டணத்தின்படி ஆட்டோ கட்டணம் வசூல் செய்வது என முடிவு செய்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களின் வரவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மீண்டும் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.