சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழி, இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் தாழ்வுபடுத்தி பேசக்கூடாது என்ற பொதுவான நியதி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இந்தியாவில் சில மக்கள் சேரியில் வாழும் சூழலை ஏற்படுத்தியதற்கு மேல்தட்டு வர்க்கத்தினர் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, அவமானப்படுத்தக் கூடாது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.
நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, நடிகர் கலம்ஹாசன் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். ஊழல் புகார் தொடர்பாக ஆதாரம் கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ணகாந்திக்கு அனைவரும் ஆதாரவு கொடுத்தால் தவறல்ல' என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.