மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க தவறிய கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக கூறி முழக்கங்கள் எழுப்பட்டது.
இதனை தொடர்ந்து பேட்டியளித்த வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி கூறியதாவது:- கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கண்டது. தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை மாறிவிட்டது.
கடந்த 6 மாத காலமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக மாறி இருக்கிறது. சாலைகள் சரி செய்யப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் 24 நாட்களுக்கு ஓரு முறை மட்டுமே மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. தெரு விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை.
மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக அதிமுக உள்ளது. அவர்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் வரை திமுக தொடர் போராட்டம் நடத்தும்" இவ்வாறு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.