உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு புற்றுநோய் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவை: மக்களிடம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4-ந் தேதியை ‘உலக புற்றுநோய் தினமாக’ கடந்த 2000-மாவது ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் பீளமேடு அருகே தனியார் கல்லூரியில் மாநகரில் உள்ள பெண் காவலர்களை மையப்படுத்தி புற்றுநோய் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதனை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், புற்றுநோய் பற்றி பழைய சினிமா நம்மை பயமுறுத்தியது. ஆனால் இன்று அப்படியல்ல. நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.
எந்த பிரச்சினையை எப்படி அணுகுகிறோமோ அப்படித்தான் அது சாத்தியமாகிறது. புற்றுநோய் குறித்த இந்த பயிலரங்கு நல்ல மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறேன், என்றார்.