கூடலூரில் மனிதன் - வனவிலங்கு மோதலை தடுக்க ஒட்டப்பாறை, பெரியசோலை, பார்வுட், நாயக்கன்பாடி, சூண்டிமலை என 5 இடங்களில் நிரந்தர வனத்துறை கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல்.
நீலகிரி: உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் கூடலூர் பகுதியில் மனித - வனவிலங்கு மோதலை தடுப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்குக் கேரளாவிலிருந்து வரும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதுடன் மனிதர்களையும் தாக்கி கொல்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் ஓவேலி பகுதியில் நவ்சாத் என்ற தோட்டத் தொழிலாளியைக் காட்டு யானை தாக்கி கொன்றது.
இதனையடுத்து உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு சென்ற நிலையில், இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் கூடலூர் பகுதியில் மனித - யானை மோதலை தடுப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இதில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், கூடலூர் வன அலுவலர் ஓம்கார், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் பகுதியில் நிலவும் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். இதற்காகக் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் ஒட்டப்பாறை, பெரியசோலை, பார்வுட், நாயக்கன்பாடி, சூண்டிமலை உள்ளிட்ட 5 இடங்களில் உடனடியாக நிரந்தர வனத்துறை கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு கும்கி யானை, ஒரு ரோந்து வாகனத்துடன் 24 மணி நேரமும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள். அக்குழுவினர் யானைகள் குடியிருப்பை ஒட்டி வருவதை முன்னதாகவே அறிந்து கொள்ளும் விதமாகத் தொழில்நுட்ப கருவிகள் பொறுத்தபடும்.
மேலும் காட்டுயானைகள் கேரளாவிலிருந்து ஓவேலி பகுதிக்குள் நுழைந்தால் உடனடியாக கிராம மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாகத் தனி,தனியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து எஸ்டேட் நிர்வாகத்தினரை அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆலோசனை நடத்தி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களைப் பணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றும்.
தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் சென்று விடுவதுடன், அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கப்படும். மேலும் ஓவேலி பகுதியில் உள்ள கிராமங்களில் போதிய தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், என்றார்.