சிறுமுகை அருகே விஸ்கோஸ் ஆலை முன்பு சாலையில் வாகனங்களை வழிமறித்த நின்ற காட்டுயானையால் பரபரப்பு.
கோவை: சிறுமுகை அருகே வெகுநேரமாகச் சாலையின் நடுவே யானை நின்று கொண்டு வாகனங்கள் செல்ல வழிவிடாமல் அங்கும் இங்கும் உலாவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே செயல்படாத விஸ்கோஸ் ஆலை உள்ளது. இந்த ஆலை செயல்படாமல் கடந்த சில ஆண்டுகளாக மூடி கிடப்பதால் வளாகம் முழுவதும் மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காட்சி அளிக்கிறது.
மேலும் இந்த ஆலையை ஒட்டி பவானி ஆறு உள்ளதால், காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆலையில் முகாமிட்டுள்ளன.இப்படி முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அவ்வப்போது சிறுமுகை அருகே உள்ள திருவள்ளுவர் நகர்,ரேயான் நகர்,பழத்தோட்டம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வருகிறது.
இந்நிலையில் இன்றிரவு விஸ்கோஸ் ஆலை முன்பு உள்ள மேட்டுப்பாளையம் சத்தி பிரதான சாலையின் நடுவே காட்டுயானை நின்றது. வெகுநேரமாகச் சாலையின் நடுவே நின்றதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
இதனையடுத்து ஒரு வழியாகக் காட்டு யானை அங்கு இருந்து சென்ற நிலையில் மீண்டும் வாகன ஒட்டிகள் அங்கிருந்து சென்றனர்.