கோவை மாவட்டம் துடியலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோயமுத்தூர் துடியலூரில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுகுறித்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மரியம் பிரான்சிஸ் என்பவரது மகன் ஜூடி சிங் (வயது51) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், போக்சோவில் கைதான அந்த நபரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஜூடி சிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, போக்சோ வழக்கு குற்றவாளியான ஜூடி சிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.