மத்திய அரசைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஐடியுசி தொழிலாளர்கள் பங்கேற்ற சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பாதுகாப்புக்காக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
240 நாட்கள் பணி புரிந்தால் பணிநிரந்தரம், ரூ.21 ஆயிரத்திற்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6000-க்கு குறையாத ஓய்வூதியம், நல வாரிய நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் மற்றும் தாராபுரம் பகுதியில் உலுபவருக்கு நிலம் உழைப்பவருக்கு உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தேசிய செயலாளரும், அகில இந்திய துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் திரண்டனர்.
அப்போது, மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் முயன்றனர். ஆனால், பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் அமராவதி ரவுண்டானா சாலையில் அமர்ந்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி.விவசாய தொழில் சங்க மாவட்ட தலைவர் பி.ரகுபதி. தாலுகா செயலாளர் லட்சுமணன். தாலுகா துணை செயலாளர் ரவி. ஒன்றிய செயலாளர் மலையாண்டி. உட்பட 1200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழகு நாச்சியம்மன் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்து மற்றும் நான்கு சக்கர இருசக்கர வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், தாராபுரம் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தையொட்டி, அப்பகுதியில் 50 மகளிர் போலீஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.