'திமுக கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பின்னால் நிற்பாரா? என்பது சந்தேகம்தான். அப்படி இருக்கும்போது மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்ன தகுதி உள்ளது? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் காண்கிறார். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் இரு அணிகளும் தேர்தலில் போட்டியிட உள்ளன.

இதையடுத்து இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அணியினரும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை வருகை தந்த அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய பெரிய கட்சி அ.தி.மு.க.தான். கூட்டணிக்கு என்று மரபு, தர்மம் உள்ளது.

இடைத்தேர்தல்கள் என்பது ஒரு கட்சியின் பலத்தை, வளர்ச்சியை பார்ப்பதற்கான அளவுகோல் இல்லை. தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். அந்த கட்சி அ.தி.மு.க தான்.இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணத்தை அதிகம் செலவு செய்வார்கள்.

தி.மு.க தேர்தல் குழுவில் 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலிருந்தே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர் வேட்பாளராக இருக்க வேண்டும். இதில் எந்தவித குழப்பமும் இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பல தலைவர்கள் அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். பண பலம், படை பலம், அதிகார பலத்தை இந்த தேர்தலில் தி.மு.க.வினர் தவறாக பயன்படுத்த இருக்கிறார்கள். அதையெல்லாம் எதிர்த்து நிற்க கூடிய வேட்பாளர் அ.தி.மு.க. சார்பில் நிற்க வேண்டும்.

அவருக்கு பின்னால் எல்லோரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு. எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அவ்வாறு நிற்க கூடிய வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்கள் கடமை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் என்னை சந்தித்து பேசி உள்ளார்.

சில விஷயங்களை நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன். எந்த ஒரு கட்சியும் நான் வளர்ந்துவிட்டேனா, பெரிய ஆளா என்பதை விட தேர்தலில் நிறுத்தக்கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பொதுவான வேட்பாளராக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அதேநேரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது.

தற்போது எல்லா கட்சிகளைவிட காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் பிரச்னை உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்ற கட்சிகள் குறித்து எவ்வளவு தரக்குறைவாக பேசி உள்ளார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். குறிப்பாக சொன்னால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பின்னால் நிற்பாரா என்பது சந்தேகம்தான்.

அப்படி இருக்கும்போது மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்ன தகுதி உள்ளது? திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாடுகள் காணாமல் போகவில்லை என அறநிலையத்துறை அமைச்சர் சொல்லட்டும். 1,302 கோடி ரூபாய்க்கு துறை கணக்குகளில் ஆட்சேபனை இல்லை என அவர் சொல்லட்டும்.

கிட்டதட்ட 15 லட்சம் பில்களில் ஆட்சேபனை இருக்கிறது என நான் சொல்லி உள்ளேன். அமைச்சர் இல்லை என சொல்லட்டும். இந்த அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணத்தின்படி கூறி உள்ளேன். ஒரு அமைச்சர் நாம் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரப்பூர்வமாக பதில்கூற வேண்டும்.

பொத்தாம்பொதுவாக பேசக்கூடாது. கோவில் உண்டியலில் இருந்து மிக்சர், முறுக்குக்கு கூட பணம் எடுத்துள்ளீர்கள். இதற்காக அறநிலையத்துறை உருவாக்கப்படவில்லை. உண்டியலில் போடப்படும் பணம் கோவிலின் வளர்ச்சிக்காகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...