நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்திற்குள் திடீரென நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருவது அடிக்கடி அரங்கேறிவருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள டானிங்டன் விநாயகர் கோவில் வளாகத்திற்குள் கரடி ஒன்று திடீரென நுழைந்தது.
கரடியை கண்ட வாகன ஓட்டிகள், மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதேபோல, இரவு ரோந்துப் பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கிறிஸ்டோபர்(43) என்பவரை அதேபகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் கரடி துரத்தியதில் தவறி கீழேவிழுந்து காயமடைந்தார்.
பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.