சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஷா மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று திரும்பிய சுபஸ்ரீ என்பவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த மர்ம இறப்புக்கு ஈஷா மையமே காரணம் என்றும், ஈஷா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பெண் மரணம் விவகாரத்தில் ஈஷா மையம் மீது பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக, ஈஷா மையத்திற்கு ஆதரவாகவும் சில கட்சிகளும், அமைப்புகளும் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா மையத்திற்கு பயிற்சிக்கு வந்த திருப்பூரைச் சேர்ந்த சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது எனவும், யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் அமைதி காத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஈஷா, சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூப்பர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன்படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள், சுபஸ்ரீ மரண விவகாரத்தை தங்கள் சுயலாபத்திற்காக அரசியலாக்க முயற்சி எடுத்து வருவதாகவும் ஈஷா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இவ்வழக்கு குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஈஷா எச்சரித்துள்ளது.
வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் & ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.
விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது எனவும் ஈசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.