தமிழக அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை குனியமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோவை: அப்போது அதிமுக தொண்டர்களிடையே பேசிய எம்எல்ஏ எஸ்பி வேலுமணி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சி இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையில், ஏதாவது ஒரு திட்டத்தை தமிழக அரசு குனியமுத்தூருக்கு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
பொங்கலுக்கு கரும்பு வாங்க போராட்டம் நடத்த வேண்டியதாக உள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியதுதான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அப்புறம் இன்பநிதி என தொடர்ந்து வருவார்கள்.
தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக தான். தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை நிற்கலாம். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியை வெல்வோம். நாங்க திரும்ப வருவோம் திமுக செய்யாததை நாங்கள் வந்து செய்வோம்.
மின் கட்டணம், சொத்து வரி, பால் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். திமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று குறை கூறும் அளவிற்கு திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் திமுக அரசு 20 மாதங்களாக எதுவும் செய்யாமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மந்தகதியில் நடப்பதாகவும், பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.
ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு தமிழகம் என அனைவரும் அழைக்கலாம் என கூறியது குறித்து கருத்து கேட்டதற்கு அது குறித்து நான் பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன் என்றார்.
தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அதிமுக தான். அதன் பிறகு தான் திமுக மற்ற கட்சிகள் எல்லாம். எடப்பாடி தலைமையில் இருக்கின்ற அதிமுக தான் ஒரே அதிமுக. வருகின்ற நாடாளுமன்றம் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் நிச்சயமாக வெல்வார் என்று தெரிவித்தார்.