திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் கை, கால்களை கட்டி போட்டு வாலிபரைக் கொலை செய்தவர்களை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரமுள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் இருந்த பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டனர். மேலும் கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தியதில் ரத்தம் வெளியேறிய நிலையில் அந்தச் சடலம் இருந்துள்ளது. அருகில் மது பாட்டில்கள் இருந்துள்ளன.
பின்னர் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இறந்த நபர்குறித்த விபரம் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும், இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் படி ஆய்வு செய்தபோதுதான் கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நண்பர்களுடன் மது குடிக்க சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி இருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித் குமார் கூறி சென்றுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.