கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
கோவை: கோவையில் அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அரங்கு அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஞாயிற்றுகிழமை காலை பத்து மணிக்கு நேரு விளையாட்டரங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த ஆய்வு கூடத்தில் பங்கேற்பார்.
பின்னர், கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்க உள்ளார்.
முதலமைச்சர் கோவை மாவட்டத்தில் இதுவரை 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளார். தற்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைப்பார்.
இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பாக நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்கள் உதவிகளை வழங்குவார்.
இலவச திட்டங்களுக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். தேர்தல் வரும் போது, அதே இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்காளர்களை சந்திக்கும் காட்சிகள் அரங்கேறி வருகிறது.
நீதிமன்றங்களில் ஒரு கருத்தையும் தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் பொழுது திட்டங்களை அறிவிப்பதில் ஒரு கருத்தையும் என இருவேறு கருத்துக்களை கொண்ட அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன.
மகளிர் இலவச பேருந்து சேவையால் மகளிர் பலர் பயனடைந்துள்ளனர். மகளிர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் உன்னதமான திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கினார். இவை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வழங்கி வருகிறது. சிலருக்கு அவதூறு பரப்ப வேண்டும், ஆனால் அவதூறு கருத்துக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள 2.67 கோடி பேரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஆதாரை இணைத்துள்ளனர்.
நல்ல முயற்சி என்பதால் நீதிமன்றமே ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. 31 ம் தேதி வரை எவ்வளவு பேர் முழுவதுமாக இணைத்துள்ளனர் என்ற கணக்கீடு வந்த பிறகு முதல்வரிடம் கூறி அதன் பின் என்ன செய்யலாம் என முடிவெடுக்கப்படும்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சில அரசியல் இயக்கங்கள் அரசியல் சூழலுக்காக சமூக வலைதளங்களில் பரப்பும் தவறான கருத்துகளை நம்ப தேவையில்லை.
பொங்கலுக்கு இலவசங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை நேற்று முதலமைச்சர் அறிவித்தார். அதிலுள்ள குறைகள் தொடர்பாக அந்த துறை சார்ந்த அமைச்சர் பதிலளிப்பார். ஞாயிற்றுகிழமை நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் இடம் பெறும், என தெரிவித்தார்.