வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதியரசர் ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரண அறிக்கையை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம், என்றார்.
கோவை: கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் இன்று திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நீதியரசர் ஆறுமுகசாமி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், நாம் எடுக்கும் வழக்கு சரியா, தவறா என வழக்கறிஞர்கள் முடிவு செய்வதை விட நீதிமன்றத்திடம் கொடுத்து விட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது:
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றி வழக்கறிஞர்கள் என்னிடம் கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால். ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒ.பி சிட்டி, சுகர், பிபி இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா..? என்பது தான் முக்கியமான விஷயம்.
அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது தான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். லேப்டாப் முன் உட்காருங்கள். இந்த தகவல்களை கம்ப்யூட்டரில் செக் செய்து பாருங்கள். உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வு அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன், என்றார்.