குனியமுத்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் மூவர் திருடிச் சென்ற நிலையில் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ பிரசாத். இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (29.11.2022) இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை என கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள வீட்டின் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்கள் வண்டியை ஓட்டி செல்லாமல் டோ செய்து நகர்த்திச் செல்கின்றனர். இதனையடுத்து வாகன உரிமையாளர் சிவ பிரசாத், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.