பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர் அகமது கபீர் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.
பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.