குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் இன்று மதியம் சாலை ஓரத்தில் இருந்த மண், பாறைகள் மற்றும் மரங்கள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், திடீர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இன்று, குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் இன்று மதியம் சாலை ஓரத்தில் இருந்த மண், பாறைகள் மற்றும் மரங்கள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.
பாறைகள் உருண்டு விழுவதைக் கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தினர்.
உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதனால் குன்னூர் - மேட்ப்பாளையம் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.
தொடர் மழை, சாலை விரிவாக்க பணிகளுக்காக மலை பகுதிகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு வருவது, கன ரக வாகனங்கள் அதிக அளவு செல்வது போன்ற காரணங்களினால் அதிர்வு ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மண் சரிந்து விழும் போது அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.