கூடலூர் அடுத்த தேவாலா பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வசதியான இடத்திற்கு வரும் வரை காத்திருக்க வனத்துறை முடிவு.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்தி பாப்பாத்தி என்ற பெண்மணியை PM2 மக்னா யானை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கான பணியை தொடங்கினர். அப்போது அந்த யானை கேரள மாநில எல்லையோரத்திற்குச் சென்றதால், மீண்டும் அந்த PM2 யானை தேவாலா பகுதிக்கு வரும் வரை வனத்துறையினர் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்த யானை தேவாலா பகுதிக்கு வந்தது. இதனையடுத்து அதனைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் மேற்கொண்ட நிலையில் அந்த யானை புளியம்பாறை அடுத்துள்ள கோழி கொல்லி ஆதிவாசி கிராமத்தை ஒட்டி இடம்பெயர்ந்தது.
யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது, யானை மலை சரிவில் இருந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் மூலம் எளிதில் பிடித்து லாரியில் ஏற்றுவதற்கு வசதியான இடத்திற்கு வரும் வரை காத்திருந்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11வது நாளாக இன்றும் மக்னா யானையை பிடிப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.