உண்ணாவிரதம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
கோவை: திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவை மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சி விளம்பர ஆட்சியாக மட்டுமே உள்ளது.
கோவையில் பல்வேறு சாலைகள் மோசமான நிலையல் உள்ளது. மழையின் போது பொதுமக்கள் சாலைகளில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக 11 தொகுதிகளை கைப்பற்றியது. உள்ளாட்சியில் திமுகவினர் தான் உள்ளனர்.
மக்கள் ஓட்டு போட்டார்களா? அவர்களே ஓட்டு போட்டு வெற்றி பெற்றார்களா? அது வேறு கதை. ஆனால் தேர்தலின் போது கொலுசோடு வந்தார்கள் இப்போது யாரும் வரவில்லை. இப்போதே கோலப்போட்டி என்ற பெயரில் பரிசுகளை கொடுக்க ஆரம்பித்து வருகின்றனர்.
கோவை பிரச்சனைகளை சொல்லி போராட்டம் அறிவித்தவுடன், எடப்பாடியார் உடனடியாக தானே துவக்கி வைப்பதாக கூறினார். திமுகவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிச்சாமி மாதிரி எதிர்க்கட்சி தலைவர் வேறு யாரும் இல்லை. தமிழகம் முழுவதும் எந்த மூலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கும். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இன்று வலுவான எதிர்கட்சியாக உள்ளோம். ஆனால் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். எடப்பாடியார் முதல்வரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் எதிர் கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றனர்.
அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. திமுக தைரியம் இருந்தால் இப்போது தேர்தல் வையுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசு சிறிய சாலைகளை கூட போட வக்கில்லாத அரசாக உள்ளது. பத்திரிக்கைகள் என்ன வேண்டுமானும் எழுதி கொள்ளுங்கள் கவலையில்லை. அதிமுக அசைக்க முடியாத எதிர்க்கட்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கோவை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
குறிப்பாக கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் செயல்படாமல் உள்ளது, அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகளில் கோவைக்கு முதலமைச்சர் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. கோவைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தார். அந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை.
பத்து ஆண்டுகளில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நாங்கள் தந்துள்ளோம். அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல மேம்பாலங்கள் கட்டினோம். கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஒன்றரை ஆண்டுகளில் எதாவது செய்துள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பினார்.
மாநகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை. வரி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். தமிழக உளவுத்துறை செயல்படவில்லை. காவல்துறை செயலிழந்து விட்டது. ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர். முதலமைச்சர் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.