கோவை சாய்பாபா காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற பல்மருத்துவ முகாமில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரதாப், சிறுவயதிலேயே பல் பிரச்சினை கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை அளித்து சரிசெய்யலாம் என்றார்.
கோவை: கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ராமலிங்கம் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
“E Ways to Smile Ways” என்ற இந்த சிறப்பு பல் மருத்துவ முகாமானது, கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர், காட்டன் சிட்டி மற்றும் சிந்தி மகளிர் மன்றம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையுடன் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமின் துவக்க நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து, மருத்துவர்கள் பல் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேசியதாவது, கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 18 மாநகராட்சி பள்ளிகளுக்கு முதற்கட்டமாக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை செய்யப்படுகிறது.
மாணவர்களின் சிறுவயதிலேயே பல் பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 84 மாநகராட்சி பள்ளிகளிலும் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் அரசாங்கத்துடன் பல்வேறு சமூக ஆரவலா்கள் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். பல் பிரச்சனைகளை பொருத்தவரையில் ஆரம்ப கட்டநிலையிலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்றால் நாளடைவில் அதிக பாதிப்பு எற்படுத்த கூடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி கல்விக் குழுத்தலைவர் மாலதி நாகராஜ், மாநகர கல்வி அலுவலர் ரெங்கநாதன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், சிந்தி மகளிர் மன்ற அமைப்பினர் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.