மின் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வரும் 25-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடைபெற்றது.
அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார், சுருளிவேல் உள்ளிட்டோர் பேசியதாவது, கொரோனா காரணமாக ஏற்கனவே சிறு குறு தொழில் செய்வோர் கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். எனவே குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் பீக் ஹவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எனவே குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, போசியா கூட்டமைப்பின் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து, கோவையில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் தொழில் கூடங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.