காஷ்மீரை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக திருப்பூரில் பேட்டியளித்த பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார். .
திருப்பூர்: பல்லடம் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக அரசு தயாரா என கேள்வி எழுப்பினர்.
சிறுபான்மையினருக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு ஓட்டு வங்கிக்காக பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமானதாக இருப்பதாக சாடிய அவர்,பெட்ரோல் குண்டு,மனித வெடிகுண்டு தாக்குதல் கார் குண்டு வெடிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு கொண்டு வருவதற்கு முன்பாக எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததோ அந்த அளவுக்கு தமிழகம் தற்போது இருப்பதாக வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டினார்.
ஆன்மீகத்தை அதிகளவு நேசிக்கக்கூடிய மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில் ஆன்மிகத்தை எதிர்த்த கலைஞரின் பெயரை பேருந்து நிலையத்திற்கு சூட்டுவதற்கு பாஜக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கூறிய அவர், எனவே சுதந்திரத்திற்காக போராடிய தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய இப்ராகிம், தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் தொடர்பு 100 சதவிகிதம் இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த முடியாத வகையில் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.