சித்திரைசாவடி அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை இடையூறாக உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை: கோவை மாவட்டம் பூலுவபட்டி அடுத்த சித்திரைசாவடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டது. அப்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் அந்த பகுதி வளைவான பகுதி என்பதால் அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், அங்கு அனுமதி கொடுக்கக் கூடாது மேலும் பெண் விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவிகள் அவ்வழியாக செல்லக்கூடிய சூழல் உள்ளதால் டாஸ்மாக் அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் கூறியிருந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் இன்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆலந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.