பல்லடம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் படுஜோராக கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருபோதும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் உள்ள சேடபாளையம் கிராமத்தில் மங்கலம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி காட்டுதீ போல் பரவியதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
தகவறிந்து சென்ற பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டாஸ்மாக் அமைய உள்ள இடம் பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்டதா? அல்லது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடமா? என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி என ஊர்ஜிதப்பட்டது. டாஸ்மாக் கடை திறப்பது குறித்து தெரிவித்துள்ள பொதுமக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே இடத்தில் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்படதாகவும் கூறினார்.
ஆனால் தற்பொது மீண்டும் கடையை ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறியுள்ள பொதுமக்கள் ஒருபோதும் மதுபான கடையை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.