செல்போன்களில் இருந்து அழைத்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் கணினி மூலம் அழைத்து இன்ஸ்டன்ட் லோன் தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து ஏமாற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
கோவை: முன்பெல்லாம் லோன் வாங்க வேண்டும் என்றால் குதிரை கொம்பு கதையாக இருக்கும். குறைந்த தொகை லோன் வேண்டுமானாலும் ஸ்சூரிட்டி, சொத்து பத்திரத்தை உத்தரவாதமாக கொடுப்பது, என எண்ணற்ற நிபந்தனைகளுக்கு பின்னரே லோன் கிடைக்கும்.
ஆனால், இப்போதெல்லாம் இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு போல, லோன்களும் இன்ஸ்டன்ட் ஆகிவிட்டது. உடனடி லோன் மூலம் ஆன்லைன் செயலி மூலமாக ஆவணங்கள் எதுவும் இன்றி சிறிது நேரத்தில் லோன் தரப்பட்டு, அக்கவுண்ட்டில் கிரிடிட் செய்து தருகின்றனர். ஒருபுறம், இதற்கு லோன் பிராசசிங் கட்டணம், அதிக வட்டி வசூலித்து வந்தாலும், மறுபுறம் லோன் கொடுக்காமல் வாடிக்கையாளர்களை கட்டணம் மட்டும் கட்ட வைத்து ஏமாற்றும் கும்பல்கள் வலம் வருகின்றன.
இன்ஸ்டன்ட் லோன் என்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், இன்ஸ்டன்ட் என்பதில் பல இன்னல்கள் உள்ளது என்பதை இந்த சைபர் கிரைம் வழக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மோசடி ஆசாமிகள் வலையில் வீழ்ந்த முதியவர்
கோவையை சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவர் பணத்தேவையில் இருந்திருக்கின்றார். அப்போது அவருக்கு லோன் தரும் பிரபலமான நிதி நிறுவனத்தின் பெயரில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. பண தேவையில் இருந்த விவேகானந்தனிடம் பஜாஜ் நிறுவனத்தின் மேலாளர் என்ற கூறி குப்தா என்பவர் ரூபாய். 50 ஆயிரம் லோன் தருவதாக தெரிவித்துள்ளார்.
50,000 லோனுக்கு 24,000 பிராசசிங் பீஸ்..!
லோன் பணத்தை நீங்கள் எளிதாக பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அதற்கு பிராசசிங் பீஸ் (Processing fee) செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த விவேகானந்தன், ஐம்பதாயிரம் ரூபாய் கடனுக்காக மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் பிராசசிங் பீஸ் செலுத்தி உள்ளார்.
அதாவது இன்ஸூரன்ஸ், பிராஸஸிங் பீஸ், டாக்குமெண்ட் சார்ஜ், டேக்ஸ், இதர பணிகளுக்கான சார்ஜ் என அவ்வப்போது ஆன்லைனில் விவேகானந்தன் பணம் செலுத்தியிரிக்கின்றார்.
கூடுதல் லோன்..! ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்த ஆசாமிகள்
50 ஆயிரம் கடனை எதிர்நோக்கி காத்திருந்த விவேகானந்தனுக்கு வர்மா என்ற ஒரு நபர் அலைபேசியில் அழைத்திருக்கிறார். அதன்படி, 50 ஆயிரம் கடனை, ஆபர் மூலம் 5 லட்சமாக உயர்த்தி வழங்க உயர் அதிகாரிகள் அப்பூரூவல் தந்திருப்பதாக வர்மா, விவேகானந்தனிடம் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கான அப்பூரூவல் லேட்டர் ஒன்றையும் விவேகானந்தனுக்கு ஆன்லைனில் தந்திருக்கின்றார். பின்னர், அவர்கள் கேட்டதற்கு இணங்க இன்ஸூரன்ஸ், பிராஸஸிங் பீஸ், டாக்குமெண்ட் சார்ஜ், டேக்ஸ், இதர பணிகளுக்கான சார்ஜ் என அவ்வப்போது ஆன்லைனில் விவேகானந்தன் பணம் செலுத்தியுள்ளார்.
முதலில் ரூபாய் 50 ஆயிரம் கடனுக்காக செலுத்திய கட்டணம் மற்றும் இப்பொழுது கூடுதலாக 5 லட்சம் ரூபாய் லோனுக்கான கட்டணம் என விவேகானந்தன் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
கடைசி வரையில் கடன் தரவேவில்லை..!
லோன் கிடைக்கும் என்று நினைத்து பிராஸஸிங்க் ஃபீஸ் கட்டிய விவேகானந்தனுக்கு கடைசிவரை கடன் கிடைக்கவே இல்லை. என்ன தான் ஆச்சு என்று அந்த நிறுவனத்திடம் கடன் கேட்டு மீண்டும் அழைத்தபோது முறையாக பதிலும் இல்லை.
இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் லோன் தருவதாக பேசிய குப்தா, வர்மா என்ற நபர்கள் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் என்பது தெரியவந்தது.
அவர்களின் நிஜ பெயர்கள் குப்தா, வர்மா இல்லை என்றும் அவர்கள் போலியான பெயரை சொல்லி பணம் பறிக்கும் கும்பல் என்பது விசாரணையின் அம்பலமானது.
மேலும், குப்தா மற்றும் வர்மா இருவரும் பஜாஜ் ஃபினான்ஸிலிருந்து பேசுவதாக தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லை.
நம்பிக்கையான நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக முதியவரை நம்ப வைப்பதற்காக, இருவரும் பஜாஜ் கம்பெனி பெயரை தவறாக பயன்படுத்தியதும், பணம் பறிக்கும் நோக்கில் தான் விவேகானந்தனிடம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி இந்த மோசடி ஆசாமிகள் பணம் பறித்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
மாட்டிக்கொள்ளாமல் இருக்க கணினி நம்பரில் இருந்து அழைப்பு...!
பொதுவாக குற்றங்கள் நடக்கும்போது குற்றம் செய்தவர்கள் தடயத்தை அழிப்பது வழக்கம் .இவர்கள் பாணியில், தான் தடயமே இல்லாமல் சைபர் குற்றவாளிகளும் தடயங்களை கண்டுபிடிக்க முடியாத நூதன முறைகளை கையாளுகின்றனர்.
இவ்வாறான குற்றமே விவேகானந்தன் விடயத்திலும் நடந்திருக்கின்றது. வழக்கமாக இந்தியாவில் இருந்து வருகின்ற அழைப்பு +91 என்ற நம்பரில் இருக்கும். ஆனால், விவேகானந்தனுக்கு +91 ல் ஆரம்பிக்கும் அழைப்புகள் எதுவும் வரவில்லை. அனைத்து அழைப்புகளும் கம்ப்யூட்டர் மூலமாக விடுத்த அழைப்புகள்.
இந்த அழைப்புகள் போலி டொமைன் ரிஜிஸ்டரான கணினி மூலம் வந்துள்ளது. +91 அழைப்பாக இருந்தால் எந்த இடத்தில் இருந்து அழைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட முடியும். ஆனால், கணினி அழைப்புகள் அவ்வாறில்லை.
கணினி மூலம் வரும் அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாததால், தற்போது சைபர் கிரைம் மூலம் மோசடிகளை அரங்கேற்றுபவர்கள் அதிகமாக கணினி மூலமாகவே அழைப்புகளை விடுத்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த நம்பரிலிருந்து அழைப்பா..? எடுத்து விடாதீர்கள் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்.
இது போன்ற மோசடிகள் குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தப்பிப்பது குறித்து சைபர் கிரைம் போலிஸாரிடம் சிம்பிளிசிட்டி சார்பாக பேசிய போது, முக்கியமான தகவல்கள் நமக்கு தெரியவந்தன.
சமீபகாலமாக லோன் தருவதாக சொல்லி லட்சக்கணத்தில் ஆன்லைன் மூலம் நூதன வழிப்பறி நடக்கின்றது. இன்ஸ்டண்ட் லோன் என்ற பெயரில் சூரிட்டி இல்லாமல் லோன் தருவதாக கூறுவதால், ஏராளமான மக்கள் இவர்கள் விரித்த வலையில் விழுகின்றனர்.இது பெரும் ஆபத்து.
சூரிட்டி இல்லாமல் கடன் தருவதாக சொன்னால், சூரிட்டி இல்லாமல் முகம் தெரியாத நபர் ஏன் லட்சக்கணக்கில் லோன் தர வேண்டும் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்ப வேண்டும். அவ்வாறு யோசித்தாலே போதும் இவர்கள் போலி நபர்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
அதே போல, லோன் செயலி மூலமாக லிங்க்கை அனுப்பி இதை கிளிக் செய்தால் உடனடியாக லோன் பெறலாம் என்று அனுப்பப்படும் லிங்க்குகளை எக்காரணத்தைக் கொண்டும் கிளிக் செய்யக்கூடாது. முக்கியமாக, +91 என்ற எண்ணில் ஆரம்பமாகும் அழைப்பை தவிற மற்ற அழைப்புகளை ஏற்க கூடாது.
ஒருவேளை வெளிநாடு அழைப்பாக இருந்தால் பேசலாம். லோன் தருவதாக சொன்னால் அந்த அழைப்பை உடனடியாக துண்டித்துவிட வேண்டும். பொதுவாகவே லோன் தருவதாக இந்திய நாட்டு அழைப்புகளே வந்தாலும் நேரில் பார்த்து நபரை உறுதிப்படுத்தாமல் அவர்கள் கேட்கும் ஆவணங்களை தருவதோ மற்ற வேலைகளில் ஈடுபடுவதோ தவிர்த்து விட வேண்டும்.
லோன் தருவதாக ஆசை வார்த்தை தெரிவிக்கின்ற ஆன்லைன் ஆசாமிகள் அவ்வளவு எளிதாக போலிஸிடம் மாட்டிக்கொள்வதில்லை. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
அவ்வாறு, ஆன்லைன் ஆசாமிகளால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் நம்பரில் அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.