ரிசர்வ் படை பயிற்சி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் ராதிகா என்ற பெண் தலையில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில்மத்திய ரிசர்வ் படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் எப்போதும் யானை நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் பயிற்சி வளாக குடியிருப்பில் உள்ள ராதிகா என்பவர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, ராதிகாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
காட்டு யானைதாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த ராதிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு வளாகத்தில் உள்ள CRPF மருத்துவமனையில்அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர், மேல் சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மத்திய ரிசர்வ் படை வளாகத்திற்குள் யானை புகுந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர்காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் மத்திய ரிசர்வ் படை ஜ.ஜி.-யின் மெய் காவலர் மோகனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.