கோவை நகை வியாபாரிகளிடம் 613 சவரன் நகையை வாங்கி ஏமாற்றிய உதகை நகை வியாபாரிகளின் கடையில் கோவை துரித குற்ற பிரிவு போலிசார் 7 மணி நேர சோதனையில் 80 சவரன் தங்கம், 42 ஆயிரம் ரூபாய் பணம், 2 வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை நகை வியாபாரிகளிடம் 613 சவரன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்தவர்களின் உதகையில் உள்ள நகை கடையில், கோவை துரித குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். 7 மணி நேரம் நீடித்த சோதனையால், உதகை பஜார் பகுதியில் பரபரப்பு நிலவியது.
உதகையில் உள்ள மெயின் பஜாரை சேர்ந்த சுபாஷ் உதகையில் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். அவரது இளைய மகன், முகேஷ் குமார், கோவை ஆர்.எஸ்.புரத்தில் லட்சுமி டைமண்ட் என்ற கடையை நடத்தி வரும் நிலையில், மூத்த மகன் மகேஷ் குமாரும் உதகையில் நகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு கோவையை ராஜா வீதியில் உள்ள சபரி ஜூவல்லரி மேலாளர் சபரிநாதன் என்ற நகை வியாபாரியிடம் நகை ஆர்டர் இருப்பதாக கூறி 892 கிராம் தங்க நகைகளை மகன்கள் முகேஷ் குமார், மகேஷ்குமார் தந்தை சுபாஷ் 3 பேரும் இணைந்து பெற்றுக் கொண்டு அதற்கான தொகையை 2 வாரத்தில் தருவாதாக கூறி சென்றுள்ளனர்.
ஆனால், நகைகான பணத்தை சபரிநாதனுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சபரிநாதன் 3 பேரிடம் கேட்ட போது, 2018-ஆம் ஆண்டு 281 கிராம் தங்கத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி 611 கிராம் தங்கத்தை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து, முகேஷ் குமார், மகேஷ்குமார் மற்றும் அவரது தந்தை சுபாஷ் ஆகியோர் மீது சபரிநாதன் கோவை குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குபதிவு செய்த குற்றப்பிரிவு போலிசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 3 பேரும் கோவையை சார்ந்த பத்மாராஜ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ரவிசங்கர், பாலாஜி முரளி, தண்டபாணி மற்றும் திருச்சூரை சார்ந்த தீபக் உள்ளிட்ட மேலும் 4 நகை வியாபாரிகளிடமும் நகைகளை வாங்கி ஏமாற்றியது அம்பலமானது.
இதையடுத்து, தந்தை மகன்கள் என 3 பேரும் 613 சவரன் நகைகளை வாங்கி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் 3 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று கோவை துரித குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேனி தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் உதகையில் உள்ள முகேஷ்குமாரின் தந்தைக்கு சொந்தமான ஸ்ரீ லக்ஷ்மி ஜுவல்லரியில் சோதனை நடத்தினர்.
சோதனையில், 80 சவரன் நகைகள், 42 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 வங்கி கணக்கு புத்தகங்கள் மட்டுமே சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சோதனையை முடித்து மீண்டும் கோவைக்கு திரும்பி சென்றனர்.
தந்தை மற்றும் மகன்கள் 5 நகை வியாபாரிகளிடம் இருந்து 614 சவரன் நகைகளை பெற்று ஏமாற்றிய நிலையில், இன்று அவர்களுடைய கடைகளில் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றதால் ஊட்டி பஜார் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.