பல்லடம் அருகே மில் ஒன்றில் பணியாற்றி வரும் வடமாநில இளைஞர் தௌஃபிக்கை மர்ம நபர்கள் மூவர் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேட்டு தோட்டத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை மில் செயல்பட்டு வருகிறது.
இந்த மில்லில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த தவுஃபிக்(37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர், நேற்று மதியம் தேநீர் குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திடீரென தவுஃபிகை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தௌஃபிக் மில்லுக்கு சென்று நடந்தவற்றை மில் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து காயமடைந்த தவுபிஃகை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டு செல்போன் பறிக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.