கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், கோவை மாவட்டத்தில்‌ பாதுகாப்பினை மேலும்‌ உறுதி செய்திடவும்‌ காவல்‌துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை உக்கடம்‌ பகுதியில்‌ 23-10-2022 அன்று நிகழ்ந்த கார்‌ சிலிண்டர்‌ வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ விசாரணை குறித்தும்‌, பொதுவான சட்டம்‌ ஒழுங்கு நிலவரம்‌ குறித்தும்‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ இன்று, அக்டோபர் 26 ஆம் தேதி தலைமைச்‌ செயலகத்தில்‌ விரிவான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார்‌ சிலிண்டர்‌ வெடிப்பு சம்பவம்‌ தொடர்பாக, காவல்‌ துறையினரால்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ விசாரணை குறித்தும்‌, கோவை மாவட்டத்தில்‌ செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ விவாதிக்கப்பட்டது.

இந்தச்‌ சம்பவம்‌ தொடர்பான வழக்கு விசாரணையின்‌ தற்போதைய நிலை குறித்தும்‌, கோவை மாவட்டத்தில்‌ பாதுகாப்பினை மேலும்‌ உறுதி செய்திடவும்‌ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ காவல்‌துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.

இதுபோன்ற சம்பவங்களின்‌ விசாரணையில்‌, மாநிலம்‌ தாண்டிய பரிணாமங்களும்‌, பன்னாட்டுத்‌ தொடர்புகளும்‌ இருக்க வாய்ப்புள்ளதால்‌, இவ்வழக்கின்‌ விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (NIA) மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இந்தக் கூட்டத்தில்‌ முடிவு செய்யப்பட்டது.

மேலும், கோவை மாநகரின்‌ பாதுகாப்பினை வலுப்படுத்திட கரும்புக்‌ கடை, சுந்தராபுரம்‌, கவுண்டம்பாளையம்‌ ஆகிய மூன்று பகுதிகளில்‌ புதிய காவல்‌ நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

மாநிலத்தில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌, சம்பவங்கள்‌ வருங்காலங்களில்‌ நடைபெறாமல்‌ தடுத்திடும்‌ வகையில்‌, காவல்‌ துறையில்‌ ஒரு சிறப்புப்‌ படையை உருவாக்க வேண்டும்.

கோவை உட்பட தமிழ்நாட்டின்‌ முக்கிய நகரங்களிலும்‌, மக்கள்‌ அதிகம்‌ வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும்‌, கூடுதல்‌ நவீன கண்காணிப்புக்‌ கேமராக்களை விரைவில்‌ பொருத்துவதற்கு‌ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌. மாநிலத்தின்‌ உளவுப்‌பிரிவில்‌ கூடுதல்‌ காவல்‌துறை அலுவலர்களை நியமனம்‌ செய்ய வேண்டும்.‌

இதுபோன்ற சட்டவிரோதச்‌ செயல்களில்‌ ஈடுபடுவோரைப்‌ பற்றியும்‌, அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப்‌ பற்றியும்‌ நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும்‌, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தக்‌ கூட்டத்தில்‌, தலைமைச்‌ செயலாளர்‌ இறையன்பு, உள்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ பனீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர்‌, சைலேந்திரபாபு, காவல்‌துறை கூடுதல்‌ இயக்குநர்‌ (நுண்ணறிவு) டேவிட்சன்‌ தேவாசிர்வாதம்‌ மற்றும்‌ காவல்‌துறை உயர்‌ அலுவலர்கள்‌ பலரும் கலந்து கொண்டனர்‌.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...