குழந்தைகளாய் இருக்கும் போதே வாசிப்பு வழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற அடிப்படையில் 30 இடங்களில் புத்தக அலமாரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 200 புத்தகங்கள் வைக்கப்படும்.
கோவை: இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் விதமாக கோவை மாநகர காவல்துறை சார்பில் வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன், இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவும், கோவையில் வீதிதோறும் நூலகம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
முக்கியமாக, குடிசைப்பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற அடிப்படையில் இன்று 30 இடங்களில் புத்தக அலமாரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 200 புத்தகங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளாய் இருக்கும் போதே வாசிப்பு வழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளுக்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமான காமிக்ஸ், நீதிக்கதைகள், கார்டூன் படங்கள் உள்ள புத்தகங்கள் என தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போயும் படிக்கலாம்.
இந்த 30 இடங்கள் அல்லாது, மொத்தமாக 50 இடங்களில் தனியார் கல்லூரி சார்பில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெருவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பராமரிப்பார்.
பொழுதை ஆக்கபூர்வமாக செலவிட மற்றும் ப்ரீயாக உள்ள நேரத்தில் நூலகங்களில் உள்ள அவரவருக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்வு செய்து வாசிப்பதன் மூலம், போதை பொருட்கள் பயன்பாடு, செல்போன்களை தவறாக பயன்படுத்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு மனம் செல்லாமல் இருக்கும் என்பதற்காகவே இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலங்களில் குழந்தைகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். தற்போது இந்த வீதிக்கு ஒரு நூலகத் திட்டத்தால் அவர்களின் மனநிலை மாறியுள்ளது.
மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டது.
இனி வரும் நாட்களில், டாக்சி நூலகமும் கொண்டுவரும் திட்டம் உள்ளது,.இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.