மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடற்ற, ஆதரவற்றோர்கள் தங்கும் விடுதி துவக்கம் "ஆதரவற்றவர்கள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை” கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவிப்பு.
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் (Helping Hearts) என்ற தொண்டு நிறுவனம் இணைந்து உலக ஆதரவற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக ஆதரவற்றோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16 கே.என்.ஜி.புதூர் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கான நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையேற்று சிறப்பித்தார்.
அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர், ஆதரவற்றவர்கள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தரும் என்று உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், முதியோர்கள் என 40 பேருக்கு இட்லி தயாரிக்கும் பாத்திரங்கள் உட்பட 15 அத்தியாவசிய, பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர், சிறப்புரையாற்றிய மாநகராட்சி ஆணையர், "இன்று உலக வீடற்றவர்களின் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மொத்தம் 5 வீடற்றோர் தங்கும் விடுதிகள் உள்ளது. அதில், 280 வீடற்றோர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதிகள், ஹெல்பிங் ஹாட்ஸ், ஈர நெஞ்சம் டிரஸ்ட் மற்றும் மலரும் விழிகள் என்ற மூன்று தன்மானார்வை தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு, சமூக நல சங்கம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இங்கு தங்கியுள்ளவர்களுக்கு மாதமாதம் மாநகராட்சி மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டும் வருகின்றன.
தற்போது, கோவை மாநகராட்சியில் 6550 சதுர அடியில் ரூ.140 லட்சம் செலவில், சுமார 130 வீடற்றோர்கள் தங்க வைத்திட காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மண்டலம் வார்டு எண்.72ல் கடலைக்கார சந்தில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடற்ற ஆதரவற்றோர்கள் தங்கும் விடுதி காப்பகம் கட்ட தேவையான அடிப்படை பணிகள் துவங்கியுள்ளது.
ஆதரவற்றவர்கள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தரும்", என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகர்நல அலுவலா் மரு.பிரதிப் வாசுதேவன் கிருஷணகுமார், மண்டல உதவி ஆணையர் சேகா், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சம்பத், பாபு, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.