விவேகானந்தா சேவாலயத்தில், இரவு உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 குழந்தைகளை ஆட்சியர் வினீத் நேரில் சந்தித்து, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அன்னை அல்லது தந்தை இழந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தினந்தோறும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு வழங்கப்பட்ட ரசம் சாதத்தை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த வார்டன் ஒரு சிலரை மட்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு மீண்டும், வாந்தி மயக்கம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 4க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிறுவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே காப்பகத்தில் இருக்கும் போதே நடைபெற்ற பரிசோதனையில், மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது.
மேலும் கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வினீத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, விவேகானந்த சேவாலயத்தில் நேற்று இரவு ரசம் சாதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நேற்று இரவு சில குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் சிறுநீர், மலம் ஆகியவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவேகானந்த சேவாலய நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.