நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பத் என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர்: நில எல்லை பிரச்சினையில் பக்கத்து நில உரிமையாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்திலேயே, தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள நல்லசாமி என்பவர் தோட்டத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் இரவு தண்ணீர் மோட்டாரை நிறுத்திவிட்டு சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பத்தின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றிவிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து நல்லசாமியிடம் கேட்ட போது, ஜேசிபி வாகனத்தை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும், தகாத வார்த்தையால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான சம்பத் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்களிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனை தொடர்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.