பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் உக்கடம் மற்றும் கோட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அது மெல்ல மெல்ல தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இதன காரணமாக இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான சூழல் காணப்படுகிறது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அமைந்திருக்கும் கோட்டைமேடு பகுதியில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மாதவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கோவை மாநகர் முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு எஸ்.பி. என்ற அடிப்படையில் 6 எஸ்.பி.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 27 வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது மத்திய அரசு அரசால் போடப்பட்ட தடையை கண்டித்து இன்று கோட்டைமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்கள் கோஷங்களை எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பு போராட்டம் நடத்தவோ அல்லது பி எஃப் ஐ அலுவலக பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடவோ கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்துபோராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கலைத்தனர்.
இந்த நிலையில் சமூக வலைதளம், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் விவாதிக்கும், ஒன்று கூடும் தளங்கள் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.