தமிழகத்தில் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து, பாஜக மாநில தலைவர் தலைமையில் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோவையில் மாபெரும் கண்டன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி சிபி.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் என கலந்து கொண்டனர்.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு, கொடுமுடி, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரளாக வந்திருந்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
சமீபத்தில், கோவையில் நடந்த அசம்பாவித சம்பவங்களை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, சிவானந்தா காலனி, டாடபாட், 100 அடி ரோடு ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.