கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.
கோவை: கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவையில் கடந்த இரண்டு தினங்களாக பாஜக தலைமை அலுவலகம், ஒப்பணக்காரர் வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மற்றும் பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி செல்கின்றனர்.
இந்தத் தொடர் சம்பவங்களால் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் மற்றும் வாகன சோதனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மாநகரில் 5 இடங்களிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் கோவை மாநகர பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.