கோவை இரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய ரயில் பயணியான சிவக்குமார் என்பவர் தூங்கி விட்டதால், திடீரென கண்விழித்து பதற்றத்தில் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே இருப்புப்பாதை போலீசார் காப்பாற்றினர்.
கோவை: நேற்று இரவு கோவை ரயில் நிலைய நடைமேடையில் 23.15 மணிக்கு கோவை ரயில் நிலைய நடை மேடை எண் 3-ல் வண்டி எண் 16528 கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வண்டியில் இருந்து தவறி விழுந்த நபரை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
அந்தப் பையனையை காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் இரயில் மூலமாக கேரளா, கண்ணூரில் இருந்து கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோவையில் இறங்க வேண்டிய அவர் உறங்கிவிட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென கண் விழித்துக் கொண்ட அவர் கோவை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டுமே என்ற பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.
அப்போது, பணியில் ரோந்து சென்ற ரெயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் - ரமேஷ், மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றினர். இதனால் அதிர்ஷ்டவசமாக சிவகுமார் உயிர்தப்பினார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை விழிப்புடன் செயல்பட்டு காப்பாற்றிய கோவை ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.