2021-22 ஆம் கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு படித்த, சிறந்த மாணவர்கள் தலா 15 பேரை, மாவட்ட அளவில் தேர்வு செய்து அனுப்புமாறு கோவை உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: 2021-22ஆம் கல்வியாண்டில் 10, +2வில் கல்வி மட்டுமல்லாமல் தனித்திறன்களில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும், காமராஜர் விருது வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2016-17 கல்வியாண்டு முதல், தமிழ் வழியில் பயின்று, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன், தனித்திறமைகளிலும் சாதிக்கும் மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த, சிறந்த மாணவர்கள் தலா 15 பேரை, மாவட்ட அளவில் தேர்வு செய்து அனுப்புமாறு கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும், இவ்விருது வழங்கப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், கல்வி மட்டுமல்லாமல், தனித்திறன்களில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க, தகுதியானோர் பட்டியலை தயார் செய்து அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பள்ளி வாரியாக தனித்திறன்கள் கொண்ட மாணவர்களின் விபரங்கள் பெறப்பட்டு வருவதாக மாவட்ட பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.