திருவண்ணாமலையை சேர்ந்த யோகாசன ஆசிரியரான பழனி என்பவர், சிரசாசனம் செய்தபடி இட்லி சாப்பிட்டதை அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.
கோவை: வரதராஜபுரம் அருகேயுள்ள விநாயகர் கோவிலில், முதியவர் ஒருவர் தலைகீழாக நின்றபடி இட்லி சாப்பிட்டது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதராஜபுரம் அடுத்த உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் உள்ள விநாயகர் கோவிலின் அகஸ்தியர் சன்னதியில் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் பழனி (70) என்பவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், யோகா மாஸ்டர் பழனி, யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார். அப்போது அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு, அதாவது சிரசாசனம் செய்தபடி இட்லி சாப்பிட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து சிரசாசனத்தில் நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் திராட்சை பழங்கள் மற்றும் பாலையும் குடித்தார். இதனை அங்கு இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், சிலர் இதனை தங்களின் செல்போன்களில் வீடியோவும் எடுத்தனர்.
இதுகுறித்து பேசிய யோகா மாஸ்டர் பழனி, நான் ஏராளமான மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறேன். ஒரு மணி நேரத்திற்குள் பல்வேறு யோகாசனங்களை செய்து முடிப்பேன். பொதுமக்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்று தலைகீழாக நின்று இட்லி, பழம் மற்றும் பால் அருந்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.