இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகைஇன்று உலகம் முழுவதும் உள்ள மலையாளம் பேசும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி தொடர்ந்து இன்று (செப் 8) திருவோண நட்சத்திரம் வரை 10-நாட்கள் இந்த பண்டிகை நடைபெற்று வருகிறது.
ஓணம் பண்டிகையின் போது, கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி வீடுகளை பார்வையிட வருகை தருவதாக நம்பப்படுகிறது.இதனால், இந்த பத்து நாட்களும் மலையாளி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவுகளை படைத்து
மகாபலியை வழிபடுவதும் வழக்கம்.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் ஏராளமான மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.
இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூ கோலமிட்டு கோவில் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்கள் அவர்களது இல்லங்களில் அத்தப்ப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை பாடல்கள் பாடி, ஓணம் சதியா எனப்படும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பலவகை சுவையுடன் கூடிய உணவை சமைத்து உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.