கடந்த 2009 ஆம் ஆண்டு கோவையிலிருந்து மதுரைக்கு என பிரத்யேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வந்தது. இந்த சேவையானது திடீரென ரத்து செய்யப்பட்டதால், தென் மாவட்ட மற்றும் கோவை மாவட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின், இந்த இரயில் சேவை மீண்டும் இன்று முதல் துவங்கியுள்ளது.
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், தென் மாவட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல, கோவையில் தயாரிக்கப்படுகின்ற மின் மோட்டார் பம்பு செட் முதல் கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தென் மாவட்டங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை ஏற்றி செல்லவும் ரயில் சேவை மிக அவசியம்.
அதேபோல, தொழில் தேவைகள் அல்லாது கல்வி மற்றும் மருத்துவ ஹப் என்று அறியப்படும் கோவையில்பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி மற்றும் தரமான நவீன மருத்துவ சிகிச்சைகள் பெற கோவை மருத்துவமனைகளை நோக்கிதென்மாவட்டங்களிலிலிருந்து ஏராளமான மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக படையெடுக்கின்றனர்.
இப்படி பல தேவைகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பயணிக்கும் பொதுமக்களுக்கு பேருந்து சேவை மட்டுமின்றி ரயில் சேவையும் மிக அத்தியாவசியமானதாக உள்ளது.
14 ஆண்டு கோரிக்கை ..!
கடந்த 2009 ஆம்.ஆண்டு கோவையிலிருந்து மதுரைக்கு என பிரத்யேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வந்தது. இந்த சேவையானது திடீரென ரத்து செய்யப்பட்டதால்,தென் மாவட்ட மற்றும் கோவை மாவட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அன்றிலிருந்து, இன்றுவரை 14 ஆண்டுகள், மீண்டும்கோயமுத்தூர் - மதுரை எக்பிரஸை இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மற்றும் தென்னிந்திய ரயில்வே துறையிடம்தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
கோரிக்கைகளுக்கு கிடைத்தது பலன்...!
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து காலையில் மற்றும் கோவையிலிருந்து பிற்பகலிலும் இந்த ரயிலின் சேவை துவங்கவுள்ளது.

அதாவது, மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல் 12.45 மணிக்கு வந்தடையும். மீண்டும் பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்றடையும். அதன்படி, இதன் பயண நேரம் ஐந்து மணி நேரம் ஆகும்.
மதுரை முதல் கோயமுத்தூர் வரை 21 இடங்களில் நின்று வருவதனால் நாள்தொறும் 3 ஆயிரம் பயணிகள் இந்த இரயில் மூலம்பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. (மதுரை, கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டிகொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை திண்டுக்கல் சந்திப்பு, அக்கரைப்பட்டி ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம்மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை கோமங்கலம், பொள்ளாச்சி சந்திப்பு கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை).
இரண்டாம் நிலை இருக்கைகளை கொண்ட 12 சாதாரன கோச்சுகளுடன் இரண்டு லக்கேஜ் பிரேக் வேன் கோச்சுகளும் இணைந்து இரயில் இயக்கப்படுகின்றன.
இந்த ரயிலில் பயணம் செய்ய யூ டி எஸ் என்ற இணையத்திலும் புக்கிங் செய்யலாமென தென்னக ரயில்வே அறிவித்திருக்கின்றன. இதனால் பேருந்தில் 7 மணி நேரம் வரை பயணித்து சோர்வான பயணிகள் இனி ஐந்து மணி நேரத்தில் எளிதாக பயணிக்கலாம்.
இணைப்பு ரயிலால் பயணிகளுக்கு போனஸ்..!
கோவை - மதுரை வரை இயங்கும் இந்த ரயில் இணைப்பு ரயில்களுக்கு பாலமாக அமைந்து பயணிகளுக்கு கூடுதல்போனஸ்..! காலை7.25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயிலில் திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தர்களுக்கு இணைப்பு ரயிலாக இந்த இரயில் இருக்கும்.
இந்த ரயில் கோவைக்கு 12.45 மணிக்கு வந்தடைந்தவுடன் பெங்களூர், சென்னை, எர்ணாகுளம் மார்காமாக புறப்படுகின்ற ரயில்களுக்கு இணைப்பு ரயிலாக இந்த ரயில் இயல்பாகவே அமைந்துவிடும்.
இதே போன்று கோவையிலிருந்து 2.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.35 மணிக்கு சென்றடைகின்ற நிலையில், திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வழியாக பயணிக்கும் விரைவு ரயில்களுக்கான இந்த ரயில் இணைப்பு ரயிலாக, கோவை - மதுரை ரயில் அமையவுள்ளது.
எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கோவை - மதுரை ரயில் - தென்மாவட்ட பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்ற இரயில் சேவையென்றால் மிகையல்ல.
கூடுதலாக முன்வைக்கப்படும் கோரிக்கை ...!
நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்த ரயில் சேவையை கொண்டுவர போராடியவர்களிடம் நாம் பேசினோம் . அப்போது நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் செந்தில், இந்த ரயிலில் கூடுதலாக ஏ.சி கோச்சுகள் அதாவது குளிர்சாதன வசதியுடனான பெட்டிகளை அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னைக்கிடையிலான ரயில் சேவை போலவே, கோவையிலிருந்து நெல்லை வரையிலான நீண்ட விரைவு ரயில் சேவையை அறிவிக்க வேண்டுமென பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
அவ்வாறு கோவை - நெல்லை விரைவு ரயில் சேவை கூடுதல் பயணிகள் பெட்டிகளுடன் விரிவுபடுத்தினால், இந்த ரயில் ஒட்டுமொத்தமாக கோவையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ரயில் சேவையாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
எனவே, இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்த பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
