வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எறிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி போலீசார் அங்கு மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை.
திருப்பூர்: வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதுகுறித்து வேலம்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கருகிய நிலையில் இருந்தது ஆண் சடலம் என்றும், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலை செய்தவர் யார், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சமீபத்தில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்லது.
இந்நிலையில் தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.