சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள மருந்து கடைக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு ஆட்டோவில் வந்த கும்பல் மயக்கம் கொடுக்கும் போதை மாத்திரைகளைக் கேட்டுள்ளனர். அதை தர மறுத்ததால், மருந்தக உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில், மோகன் குமார் என்பவர்ஸ்ரீ கணபதி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கடையைபூட்டிவிட்டு கிளம்பிய போது, ஆட்டோவில் வந்தகும்பல் மயக்கம் கொடுக்கும் போதை மாத்திரைகளைக் கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியதால், ஆத்திரதம் அடைந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்தகத்தியால் மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமாரை தாக்கியுள்ளார். இதில், அவருக்கு கையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்ட நிலையில், அவரை அப்படியே விட்டு விட்டு மூன்று பேர் கொண்டு கும்பல் அங்கிருந்த ஆட்டோவில் தப்பினர்.
இந்த சம்பவத்திற்கு முன்பே, மோகன்குமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியபடி இருந்தார். இணைப்பை துண்டிக்காமல் அப்படியே வைத்திருந்ததால் இந்த சம்பவம் குறித்து அறிந்த அவர் மனைவி, உடனடியாக குடும்ப நண்பர்களுக்கு தகவல்தெரிவிக்கவே , அவர்கள் விரைந்து வந்து மோகன்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகரில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை வருவதால்,போதை மாத்திரை கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர்கள் மருந்து கடை உரிமையாளரை கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.