தென்னம்பாளையம் உழவர் சந்தையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருப்பூர்: தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், இங்கு காய்கறிகளை வாங்குவதற்காக, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை வந்து செல்வர்.
இன்று அதிகாலை தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து, தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாவட்ட ஆட்சியர் வினீத் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.