கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மாநகரம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட வைப்புத் தொகை கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பால வேலைகள் மட்டுமே நடப்பதாகவும், மற்றபடி மாநகரம் முழுவதும் எந்த சாலைகளும் சீரமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு மழைக்கு பின் கோவையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கையில், இந்த சொத்துவரி பெரும் சுமையை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.